பொருட்பால் · குறள் 980 / 1330
98. பெருமை

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்குற்றமே கூறி விடும்.

Greatness hides the faults of others; littleness trumpets their faults alone.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பெருமைப் பண்பு பிறருடைய குறைப்பாட்டை மறைக்கும், சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பிறருடைய குறைகளை மறைப்பது பெருமைப் பண்பாகும். பிறருடைய குற்றங்களையே கூறிக் கொண்டிருப்பது சிறுமைக் குணமாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானத்தையே கூறி அவமானத்தை மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக் குற்றத்தையே கூறிவிடுவார். (மறைத்தலும் கூறலும் ஏனையிடத்தும் இயைந்தன. அற்றம் - ஆகுபெயர். தான் என்பது அசை. இவை மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு கூறப்பட்டன.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

பெருமைக்குரியவர் பிறர் பெருமைகளைச் சொல்லி அவர் குறைகளைக் கூறாமல் மறைத்து விடுவர்; சிறுமைக்கு உரியவர்‌களோ பிறர் பெருமைகளை மறைத்துக் குறைகளை மட்டுமே கூறிவிடுவர்.

— சாலமன் பாப்பையா