மு.வரதராசன் விளக்கம்
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சூது எனப்படும் தீமையின் வலையில் விழுந்தவர்கள் வயிறார உண்ணவும் விரும்பாமல் துன்பத்திலும் உழன்று வருந்துவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார் - தன் பெயர் சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப் பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர். (செல்வங்கெடுத்து நல்குரவு கொடுத்தல் தொழில் வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும், வெற்றி தோல்விகளை நோக்கி ஒரு பொழுதும் விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும், பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின் ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார். வயிறாராமை சொல்லவே ஏனைப் புலன்கள் நுகரப் பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது எதிர்கால வினைச்சொல்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சூதாட்டம் என்னும் மூதேவியால் மூடப்பட்டவர் வயிறும் நிறையாமல், துன்பத்தையும் அனுபவிப்பர்.