மு.வரதராசன் விளக்கம்
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சூதாடும் இடம், அதற்கான கருவி, அதற்குரிய முயற்சி ஆகியவற்றைக் கைவிட மனமில்லாதவர்கள் எதுவும் இல்லாதவர்களாகவே ஆகிவிடுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
இல்லாகியார் - முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் - கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும் அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலினையும் மேற்கொண்டு கைவிடாத வேந்தர். (கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல். அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும் அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சூதாட்டத்தையும் சூதாடும் இடத்தையும் சூதாடும் திறம் படைத்த கையையும் பெருமையாக எண்ணிச் சூதாட்டத்தை இறுகப் பிடித்துக் கொண்டவர் பொருளால் இல்லாதவராகிப் போனது முன்பும் உண்டு.