மு.வரதராசன் விளக்கம்
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் போது மகளிரின் தோளைப் பொருந்துவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உள்ளத்தில் அன்பு இல்லாமல் தன்னலத்துக்காக உடலுறவு கொள்ளும் பொதுமகளிர் தோளை, உறுதியற்ற மனம் படைத்தோர் மட்டும் நம்பிக் கிடப்பர்.
பரிமேலழகர் விளக்கம்
நெஞ்சின் பிற பேணிப் புணர்பவர் தோள் - நெஞ்சினாற் பிறவற்றை ஆசைப்பட்டு அவைகாரணமாகக் கொடுப்பாரை மெய்யாற் புணரும் மகளிர் தோள்களை; நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் - நிறையால் திருந்திய நெஞ்சம் இல்லாதார் தோய்வர். (பொருளும் அதனால் படைக்கப்படுவனவும் விரும்பும் நெஞ்சு அவற்றின் மேலதாகலின், புணர்வது உடம்பு மாத்திரம் என்பது அறிந்து, அது வழி ஓடாது நிற்கும் நெஞ்சினையுடையார். தோயாமையின், அஃதிலார் 'தோய்வர்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பிறவற்றைப் பெறும் பொருட்டு மன ஆசை கொண்டு, அதற்காகவே உடம்பால் புணரும் பாலியல் தொழிலாளரின் தோளை மன அடக்கம் இல்லாதவரே தீண்டுவர்.