மு.வரதராசன் விளக்கம்
நன்றாக எண்ணுதல், பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும் உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும் அறியாமை இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சிந்திக்கும் ஆற்றலும் நெஞ்சுறுதியும் கொண்டவர்கள் காமாந்தகாரர்களாகப் பெண்களையே சுற்றிக்கொண்டு கிடக்க மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண் சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் - மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை எக்காலத்தும உண்டாகாது. ('இடன் இல் பருவத்தும்' (குறள்-218) எனவும், 'இடன் இன்றி இரந்தோர்க்கு' (கலித்.பாலை.1) எனவும் வந்தமையான், 'இடன்' என்பது அப்பொருட்டாதல் அறிக. இளமைக்காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். அப்பேதைமையாவது, மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல் என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை முகத்தான் அம்மூன்றும் இதனால் தொகுத்துக் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
சிந்திக்கும் மனமும் செல்வமும் உடையவர்களிடம் மனைவி சொல்லை மட்டுமே கேட்டுச் செய்யும் அறியாமை ஒருபோதும் இராது.