மு.வரதராசன் விளக்கம்
அறச் செயலும் அதற்க்கு காரணமாக அமைந்த பொருள் முயற்சியும், மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில் இல்லை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆணவங்கொண்ட பெண்கள் இடுகின்ற ஆணைகளுக்கு அடங்கி இயங்குகின்ற பெண்பித்தர்களிடம் அறநெறிச் செயல்களையோ சிறந்த அறிவாற்றலையோ எதிர்பார்க்க முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் - அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்; பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச் செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம் மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாகா. (புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை' எனப் பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல் பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின் என்பதுதோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறச்செயலும் சிறந்த பொருட்செயலும், பிற இன்பச் செயல்களும் மனைவி சொல்லைக் கேட்டுச் செய்பவரிடம் இருக்கமாட்டா.