மு.வரதராசன் விளக்கம்
மேற்கொண்ட செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாதிருத்தல், காப்பவர் செய்து கொள்ளும் காவல் எல்லாவற்றிலும் சிறந்தது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவரின் ஆற்றலை இகழாது இருந்தால், அதுவே தம்மைக் காத்திடும் காவல்கள் அனைத்தையும் விடச் சிறந்த காவலாக அமையும்.
பரிமேலழகர் விளக்கம்
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை - எடுத்துக்கொண்டன யாவும் முடிக்க வல்லார்களுடைய ஆற்றல்களை அவமதியாமை; போற்றுவார் போற்றலுள் எல்லாம் தலை - தங்கண் தீங்கு வாராமல் காப்பார் செய்யும் காவல்கள் எல்லாவற்றினும் மிக்கது. (ஆற்றல் என்பது பெருமை,அறிவு,முயற்சி என்னும் மூன்றன் மேலும் நிற்றலின், சாதியொருமை. இகழ்ந்தவழி களைய வல்லார் என்பது தோன்ற 'ஆற்றுவார்' என்றும், அரண், படை, பொருள், நட்பு முதலிய பிற காவல்கள் அவரான் அழியுமாகலின் அவ்விகழாமையைத் தலையாய காவல் என்றும் கூறினார். பொதுவகையால் அவ்விருதிறத்தாரையும் பிழையாமையது சிறப்பு இதனால் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
எடுத்துக் கொண்ட செயல்களை இனிது முடிப்பவரின் வலிமைகளை அவமதியாமல் இருப்பது, தமக்குத் தீங்கு ஏதும் வராமல் காப்பவர் செய்யும் காவல்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது.