பொருட்பால் · குறள் 890 / 1330
89. உட்பகை

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்பாம்போடு உடனுறைந் தற்று.

Dwelling among men of hidden hate is like dwelling in a hamlet which harbours a snake.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

உள்ளத்தால் ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன் இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை - மனப் பொருத்தம் இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை; குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும். (குடங்கம் என்னும் வடசொல் திரிந்து நின்றது. இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற் கோட்படல் ஒருதலையாம், ஆகவே, அவ்வுவமையால் இறுதி வருதல் ஒருதலை என்பது பெற்றாம். (இதனான், கண்ணோடாதவரைக் கடிக என்பது கூறப்பட்டது.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

— சாலமன் பாப்பையா