மு.வரதராசன் விளக்கம்
உட்பகை உண்டான குடி அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்பு போல் வலிமை குறைக்கப் பட்டு தேய்ந்து போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அரத்தினால் தேய்க்கப்படும் இரும்பின் வடிவமும் வலிமையும் குறைவதைப் போல, உட்பகை உண்டான குலத்தின் வலிமையும் தேய்ந்து குறைந்து விடும்.
பரிமேலழகர் விளக்கம்
உட்பகை உற்ற குடி - முன் வளர்ந்து வந்ததாயினும் உட்பகையுண்டாய குடி, அரம் பொருத பொன்போலப் பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு போல அதனால் பொரப்பட்டு வலி தேயும். ('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம் 'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின் தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை முதல்வினை ஆயிற்று. காரியஞ் செய்வதுபோன்று பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலிதேய்ந்து விடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அரத்தால் தேய்க்கப்படும் இரும்பு தேய்வது போல, உட்பகை கொண்ட குடு்ம்பமும் கட்சியும் அரசும் தமக்கும் பொருது தம் பலம் இழக்கும்.