மு.வரதராசன் விளக்கம்
செப்பின் இணைப்பைப் போல புறத்தே பொருந்தி இருந்தாலும், உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி இருக்கமாட்டார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
செப்பு எனப்படும் சிமிழில் அதன் மூடி பொருந்தியிருப்பது போல வெளித்தோற்றத்துக்கு மட்டுமே தெரியும். அவ்வாறே உட்பகையுள்ளவர்கள் உளமாரப் பொருந்தியிருக்க மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் - செப்பினது புணர்ச்சி போலப் புறத்து வேற்றுமை தெரியாமற் கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது - உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத் தம்முள் கூடார். (செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின், புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி கூடாது என்பதனை, நாடு வந்தது என்பதுபோலக் கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது என்றும், உட்பகை உண்டாய குடி அப்பகையோடு கூடாது என்றும் உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
செப்பு, மூடியோடு சேர்ந்து இருப்பதுபோல் உட்பகை கொண்ட குடும்பமும், கட்சியும், அரசும் வெளியே சேர்ந்து இருந்தாலும் உள்ளத்துள் சேரவே மாட்டா.