மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் குணம் இல்லாதவனாய், குற்றம் பல உடையவனானால் அவன் துணை இல்லாதவன் ஆவான், அந்நிலைமையே அவனுடைய பகைவர்க்கு நன்மையாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
குணக்கேடராகவும், குற்றங்கள் மலிந்தவராகவும் ஒருவர் இருந்தால்,அவர் பக்கத் துணைகளை இழந்து பகைவரால் எளிதாக வீழ்த்தப்படுவார்.
பரிமேலழகர் விளக்கம்
குணன் இலனாய்க் குற்றம் பலவாயின் இனன் இலனாம் - ஒருவன் குணம் ஒன்றும் இலனாய், உடைய குற்றம் பலவாய வழி அவன் துணையிலனாம்; மாற்றார்க்கு ஏமாப்பு உடைத்து - அவ்விலனாதல் தானே அவன் பகைவர்க்குத் துணையாதலையுடைத்து. (குணம் - இறைமாட்சியுட் சொல்லியன, குற்றம் - இவ்வதிகாரத்துச் சொல்லியனவும் மற்றும் அத்தன்மையனவும், துணை - சுற்றம், நட்பு, பொருள், படை முதலாயின. பகைவர்க்கு இவற்றான் உளதாம் பயன் தானே உளதாமாகலின் 'ஏமாப்புடைத்து' என்றார். 'இலனாய்' என்னும் செய்தெனெச்சம் 'உடைய' என வந்த பெயரெச்சக் குறிப்புக் கொண்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நல்ல குணங்கள் இல்லாமல் குற்றங்கள் பலவும் உடைய அரசிற்குத் துணை இல்லாது போகும். துணை இல்லாது இருப்பதே அந்த அரசின் பகைவர்க்கு பலம்.