குறள் 867:
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை.
Unseemly are his deeds, yet proffering aid, the man draws nigh: His hate- 'tis cheap at any price- be sure to buy
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
தன்னை அடுத்துத் தன்னோடிருந்தும் பொருந்தாதவற்றைச் செய்பவனுடைய பகையைப் பொருள் கொடுத்தாவது கொள்ள வேண்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்னோடு இருந்துகொண்டே தனக்குப் பொருந்தாத காரியங்களைச் செய்து கொண்டிருப்பவனைப் பொருள் கொடுத்தாவது பகைவனாக்கிக் கொள்ள வேண்டும்.
பரிமேலழகர் விளக்கம்
அடுத்து இருந்து மாணாத செய்வான் பகை - வினையைத் தொடங்கியிருந்து அதற்கு ஏலாதன செய்வான் பகைமையை; கொளல் மன்ற வேண்டும் - சில பொருள் அழியக் கொடுத்தாயினும் கோடல் ஒரு தலையாக வேண்டும். (ஏலாதன - மெலியனாய் வைத்துத் துணிதலும், வலியனாய் வைத்துத் துணிதலும் முதலாயின, அப்பொழுது அதனால் சில பொருள் அழியினும், பின் பல பொருள் எய்தற்கு ஐயம் இன்மையின், 'கொளல் வேண்டும் மன்ற' என்றார். இவை ஆறு பாட்டானும் அது சிறப்பு வகையாற் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைத் தொடங்கி விட்டு, அதன் நலத்திற்குப் பொருந்தாதவற்றைச் செய்யும் அரசின் பகைமையைச், சிலவற்றை அழியக் கொடுத்தாவது உறுதியாகப் பெற வேண்டும்.