குறள் 864:
நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது.
His wrath still blazes, every secret told; each day This man's in every place to every foe an easy prey
அதிகாரம் - 87 - பகைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் சினம் நீங்காதவனாய், நெஞ்சத்தை நிறுத்தியாளும் தன்மை இல்லாதவனாய் இருந்தால் அவன் எக்காலத்திலும் எவ்விடத்திலும் எவர்க்கும் எளியவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சினத்தையும் மனத்தையும் கட்டுப்படுத்த முடியாதவர்களை, எவர் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் எளிதில் தோற்கடித்து விடலாம்.
பரிமேலழகர் விளக்கம்
வெகுளி நீங்கான் - ஒருவன் வெகுளியின் நீங்கான்; நிறை இலன் - அதுவேயன்றித் தான் நிறையுடையன் அல்லன்; எஞ்ஞான்றும் யாங்கணும் யார்க்கும் எளிது - அவன்மேற்சேறல் எக்காலத்தும் எவ்விடத்தும் யார்க்கும் எளிது. (நிறை-மறை பிறரறியாமை. வெகுள்தல் மாலையன் ஆகலானும், மறை வெளிப்படுத்தலானும், மேற்செல்வார்க்குக் காலமும் இடனும் வலியும் அறிந்து சேறல் வேண்டாதாயிற்று. இனி 'இனிது' என்று பாடம் ஓதி 'அவன் பகைமை இனிது' என்று உரைப்பாரும் உளர்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
கோபம் குறையாத, ரகசியங்களைக் காக்கத் தெரியாத அரசைத் தோற்கடிப்பது எப்போதும், எங்கும், எவர்க்கும் எளிது.