மு.வரதராசன் விளக்கம்
ஒருவன் அஞ்சுகின்றவனாய், அறிவு இல்லாதவனாய், பொருந்தும் பண்பு இல்லாதவனாய், பிறர்க்கு ஒன்று ஈயாதவனாய் இருந்தால் , அவன் பகைவர்க்கு மிக எளியவன்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அச்சமும், மடமையும் உடையவனாகவும், இணைந்து வாழும் இயல்பும்,இரக்க சிந்தையும் இல்லாதவனாகவும் ஒருவன் இருந்தால், அவன் பகைவரால் எளிதில் வெல்லப்படுவான்.
பரிமேலழகர் விளக்கம்
அஞ்சும் - ஒருவன் அஞ்சவேண்டாதவற்றிற்கு அஞ்சாநிற்கும்; அறியான் - அறியவேண்டுமவற்றை அறியான்; அமைவு இலன் - பிறரோடு பொருத்தம் இலன்; ஈகலான் - இவற்றின் மேலும் யாவர் மாட்டும் இவறன்மாலையன்; பகைக்குத் தஞ்சம் எளியன் - இப்பெற்றியான் பகைவர்க்கு மிக எளியன். ('தஞ்சம்', 'எளியன்' ஒருபொருட்பன்மொழி. இந்நான்கு குற்றமும் உடையான் பகையின்றியும் அழியுமாகலின் 'தஞ்சம்', 'எளியன்' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பயப்பட வேண்டாததற்குப் பயப்பட்டு, அறிய வேண்டியவற்றை அறியாத, பிறரோடு இணங்கிப் போகாத, எவர்க்கும் எதுவும் தராத அரசு, பகைவரால் தோற்கடிக்கப்படுவதற்கு மிக எளிது.