குறள் 85:
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise
அதிகாரம் - 9 - விருந்தோம்பல்
மு.வரதராசன் விளக்கம்
விருந்தினரை முன்னே போற்றி உணவளித்து மிஞ்சிய உணவை உண்டு வாழ்கின்றவனுடைய நிலத்தில் விதையும் விதைக்க வேண்டுமோ?
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
விருந்தினர்க்கு முதலில் உணவளித்து மிஞ்சியதை உண்டு வாழும் பண்பாளன், தன் நிலத்திற்குரிய விதையைக்கூட விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தாமல் இருப்பானா?
பரிமேலழகர் விளக்கம்
விருந்து ஓம்பி மிச்சில் மிசைவான் புலம் - முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு; வித்தும் இடல் வேண்டுமோ - வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா. ('கொல்' என்பது அசைநிலை. 'தானே விளையும்' என்பது குறிப்பெச்சம். இவை மூன்று பாட்டானும் விருந்து ஓம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விருந்தினர் முதலில் உண்ண, மிஞ்சியவற்றையே உண்பவனின் நிலத்தில் விதைக்கவும் வேண்டுமா?