அறத்துப்பால் · குறள் 84 / 1330
9. விருந்தோம்பல்

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்துநல்விருந்து ஓம்புவான் இல்.

Fortune smiles on the house of one who entertains with cheerful face worthy guests.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

செய்யாள் அகன் அமர்ந்து உறையும் - திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் - முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண். (மனம் மகிழ்தற்குக் காரணம் தன் செல்வம் நல்வழிப்படுதல். தகுதி: ஞான ஒழுக்கங்களான் உயர்தல். பொருள் கிளைத்தற்குக் காரணம் கூறியவாறு.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

இனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள்.

— சாலமன் பாப்பையா