மு.வரதராசன் விளக்கம்
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது ( அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல், பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.
பரிமேலழகர் விளக்கம்
பேதை பெருஞ்செல்வம் உற்றக்கடை - பேதையாயினான் பெரிய செல்வத்தைத் தெய்வத்தான் எய்திய வழி; ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் - தன்னோடு ஓர் இயைபும் இல்லாதார் நிறைய,` எல்லா இயைபும் உடைய தமராயினார் பசியாநிற்பர். (எல்லா நன்மையுஞ் செய்துகோடற் கருவி என்பது தோன்ற 'பெருஞ்செல்வம்' என்றும், அதனைப் படைக்கும் ஆற்றல் இல்லாமை தோன்ற 'உற்றக்கடை' என்றும், எல்லாம் பெறுதல் தோன்ற 'ஆர' என்றும், உணவும் பெறாமை தோன்றப் 'பசிப்பர்' என்றும் கூறினார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.