மு.வரதராசன் விளக்கம்
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்துச் செல்வதே நட்புக்கு இலக்கணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண் களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது. (அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின், அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில் உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல் ஏற்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பலர் முன்னே ஆடை நழுவும்போது உடனே சென்று உதவும் கை போல, நண்பனுக்குத் துன்பம் வந்த போது உடனே சென்று போக்குவதே நட்பு.