மு.வரதராசன் விளக்கம்
தாம் உரைத்த சூள் தவராத படி போர் செய்து சாக வல்லவரை, அவர் செய்தப் பிழைக்காக தண்டிக்க வல்லவர் யார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
சபதம் செய்தவாறு களத்தில் சாவதற்குத் துணிந்த வீரனை யாராவது இழித்துப் பேச முடியுமா? முடியாது.
பரிமேலழகர் விளக்கம்
இழைத்தது இகவாமைச் சாவாரை - தாம் கூறின வஞ்சினம் தப்பாமைப் பொருட்டுச் சென்று சாவ வல்ல வீரரை; பிழைத்தது ஒறுக்கிற்பவர் யார் - அது தப்பியவாறு சொல்லி எள்ளுதற்குரியார் யாவர்?(இழைத்தல்: இன்னது செய்யேனாயின் இன்னனாகுக எனத் தான் வகுத்தல். 'சொல்லி' என்பது அவாய் நிலையான்வந்தது. வஞ்சின முடிப்பான் புக்கு முன்னே சாவினும் தொலைவன்மையின், அது முடித்தாராவர் எனச் சாதற்சிறப்புக் கூறியவாறு.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தாம் சொன்ன சபதம் நிறைவேறாமல் போனாலும், அதற்காகவே போர்க் களத்தில் தோற்றவர் என்று எவர் இகழ்ந்து பேசுவார்?