மு.வரதராசன் விளக்கம்
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆழமும் அகலமும் கொண்ட அகழ், பரந்த நிலம், உயர்ந்து நிற்கும் மலைத்தொடர், அடர்ந்திருக்கும் காடு ஆகியவற்றை உடையதே அரணாகும்.
பரிமேலழகர் விளக்கம்
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும், வெள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய காடும் உடையதே அரணாவது. (எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும் நிழலும் இல்லா மருநிலம் என்பார் 'மண்' என்றும், செறிந்த காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார்.மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு. நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும் செயற்கையுமாய் இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தெளிந்த நீர், வெட்ட வெளியான நிலம், உயர்ந்த மலை, அடர்ந்த காடு என்னும் இவையே நீர் அரண், நில அரண், மலை அரண், காட்டு அரண் என இயற்கை அரண்களாகும்.