மு.வரதராசன் விளக்கம்
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு - பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர். (பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது. 'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு: ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்