மு.வரதராசன் விளக்கம்
நூல்களைக் கற்றிந்த போதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரை விடக் கடைப்பட்டவர் என்று கூறுவர்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களைவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கற்று அறிந்தும் நல்லார் அவை அஞ்சுவார் - நூல்களைக் கற்றுவைத்தும், அவற்றால் பயனறிந்து வைத்தும், நல்லார் இருந்த அவையினை அஞ்சி ஆண்டுச் சொல்லாதாரை; கல்லாதவரின் கடை என்ப - உலகத்தார் கல்லாதவரினும் கடையர் என்று சொல்லுவர். (அக்கல்வி அறிவுகளால் பயன் தாமும் எய்தாது பிறரை எய்துவிப்பதும் செய்யாது, கல்வித்துன்பமே எய்தி நிற்றலின், 'கல்லாதவரின் கடை' என உலகம் பழிக்கும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நூல்களைக் கற்றும் அவற்றின் பயனை அறிந்தும், நல்லவர் கூடிய அவையைக் கண்டு பயந்து அங்கே செல்லாதவர், படிக்காதவரைவிடக் கீழானவர் என்று சொல்லுவர்.