மு.வரதராசன் விளக்கம்
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கண்ணாடி, தனக்கு எதிரில் உள்ளதைக் காட்டுவதுபோல ஒருவரது மனத்தில் உள்ளதை அவரது முகம் காட்டி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
அடுத்தது காட்டும் பளிங்கு போல் - தன்னை அடுத்த பொருளது நிறத்தைத் தானே கொண்டு காட்டும் பளிங்கு போல்; நெஞ்சம் கடுத்தது முகம் காட்டும் - ஒருவன் நெஞ்சத்து மிக்கதனை அவன் முகம் தானே கொண்டு காட்டும். ('அடுத்தது' என்பது ஆகுபெயர். கடுத்தது என்பது 'கடி' என்னும் உரிச்சொல் அடியாய் வந்த தொழிற் பெயர். உவமை ஒரு பொருள் பிறிதொரு பொருளின் பண்பைக் கொண்டு தோற்றுதலாகிய தொழில் பற்றி வந்தது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தன் அருகே இருக்கும் பொருளின் நிறத்தைக் காட்டும் பளிங்கினைப்போல் ஒருவனது மனத்தே நிகழ்வதை அவன் முகம் காட்டும்.