குறள் 705:
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்.
By sign who knows not sings to comprehend, what gain, 'Mid all his members, from his eyes does he obtain
அதிகாரம் - 71 - குறிப்பறிதல்
மு.வரதராசன் விளக்கம்
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒருவரது முகக்குறிப்பு, அவரது உள்ளத்தில் இருப்பதைக் காட்டி விடும் என்கிறபோது, அந்தக் குறிப்பை உணர்ந்து கொள்ள முடியாத கண்கள் இருந்தும் என்ன பயன்?
பரிமேலழகர் விளக்கம்
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் - குறித்தது காணவல்ல தம் காட்சியால் பிறர் குறிப்பினை உணரமாட்டாவாயின்; உறுப்பினுள் கண் என்ன பயத்தவோ - ஒருவன் உறுப்புக்களுள் சிறந்த கண்கள் வேறு என்ன பயனைச் செய்வன? (முதற்கண் 'குறிப்பு' ஆகுபெயர். குறிப்பு அறிதற்கண் துணையாதல் சிறப்புப்பற்றி உயிரது உணர்வு கண்மேல் ஏற்றப்பட்டது: அக்கண்களால் பயன் இல்லை என்பதாம். இவை இரண்டு பாட்டானும் குறிப்பு அறியாரது இழிபு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் குறிப்பைக் கண்ட பின்பும் அவன் மனக்கருத்தை அறியமுடியவில்லை என்றால், உறுப்புகளுள் சிறந்த கண்களால் என்ன நன்மை?