குறள் 679:
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.
Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you
அதிகாரம் - 68 - வினைசெயல்வகை
மு.வரதராசன் விளக்கம்
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
நண்பருக்கு நல்லுதவி செய்வதைக் காட்டிலும் பகைவராயிருப்பவரைத் தம்முடன் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளுதல் விரைந்து செய்யத் தக்கதாகும்
பரிமேலழகர் விளக்கம்
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே - வினை செய்வானால் தன் நட்டார்க்கு இனியவற்றைச் செய்தலினும் விரைந்து செய்யப்படும்; ஒட்டாரை ஒட்டிக் கொடல் - தன் பகைவரோடு ஒட்டாரைத் தனக்கு நட்பாக்கிக் கோடல். (அவ்வினை வாய்த்தற்பயத்தவாய இவ்விரண்டும் பகைவர்க்குத் தன் மெலிவு புலனாவதன் முன்னே செய்க என்பார். 'விரைந்தது' என்றார்; 'விரைந்து செய்யப்படுவது' என்றவாறு. வினைசெய்யும் திறமாகலின் பகைவரோடு ஒட்டாராயிற்று. தன் ஒட்டார் பிறருட்கூடாமல் மாற்றி வைத்தல் எனினும் அமையும்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போது நண்பர்களுக்கு நல்லது செய்வதைக் காட்டிலும் தன் பகைவர்களோடு நட்புக் கொள்வது விரைந்து செய்யப்படவேண்டியது.