மு.வரதராசன் விளக்கம்
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும். (பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.