மு.வரதராசன் விளக்கம்
வஞ்சனையான வழியால் பொருளைச்சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்தில் நீரை விட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான்.
பரிமேலழகர் விளக்கம்
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று - பசிய மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு ஒக்கும். (முன் ஆக்கம் பயப்பன போல் தோன்றிப் பின் அழிவே பயத்தலால், அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்' என்றாயிற்று, ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு, இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும் சேரப் போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமார்த்தல்' என்று பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு வைத்தாற்போலும் என்றும் உரைத்தார், அவர் அவை தன்வினையும் பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல் நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தீய செயல்களால் பொருளைத் திரட்டி, அதைக் காப்பது, சுடாத பச்சைமண் பானையில் நீரை ஊற்றி அதைச் சேமிப்பது போலாம்.