குறள் 658:
கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
To those who hate reproof and do forbidden thing What prospers now, in after days shall anguish bring
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை
மு.வரதராசன் விளக்கம்
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒருவேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்
பரிமேலழகர் விளக்கம்
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும். (முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.