மு.வரதராசன் விளக்கம்
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தம் குழந்தைகளைத் தழுவி மகிழ்வது உடலுக்கு இன்பத்தையும், அந்தக் குழந்தைகளின் மழலை மொழி கேட்பது செவிக்கு இன்பத்தையும் வழங்கும்.
பரிமேலழகர் விளக்கம்
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று' வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார். 'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெற்ற பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம். அவர்களின் பேச்சைக் கேட்பது காதிற்கு இன்பம்