குறள் 626:

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர்.

Who boasted not of wealth, nor gave it all their heart, Will not bemoan the loss, when prosperous days depart
அதிகாரம் - 63 - இடுக்கணழியாமை
மு.வரதராசன் விளக்கம்
செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
இத்தனை வளத்தையும் பெற்றுள்ளோமேயென்று மகிழ்ந்து அதைக் காத்திட வேண்டுமென்று கருதாதவர்கள் அந்த வளத்தை இழக்க நேரிடும் போது மட்டும் அதற்காகத் துவண்டு போய் விடுவார்களா?
பரிமேலழகர் விளக்கம்
அற்றேம் என்று அல்லற்படுபவோ - வறுமைக்காலத்து யாம் வறியமாயினேம் என்று மனத்தால் துயருழப்பாரோ; பெற்றேம் என்று ஓம்புதல் தேற்றாதவர் - செல்வக்காலத்து இது பெற்றேம் என்று இவறுதலை யறியாதார்? (பெற்றவழி இவறாமை நோக்கி அற்றவழியும் அப்பகுதி விடாது ஆகலின், அல்லற்பாடு இல்லையாயிற்று, இதனான் பொருளின்மையான் ஆயதற்கு அழியாமையும் அதற்கு உபாயமும் கூறப்பட்டன.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பணம் இருந்த காலத்தில் மனக்கஞ்சம் இல்லாமல் பிறர்க்கு வழங்கியவர், இல்லாத காலத்தில் வரும் துன்பத்தினால் ஏழையாகி விட்டோமே என்று வருந்துவாரோ?