குறள் 625:
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும்.
When griefs press on, but fail to crush the patient heart, Then griefs defeated, put to grief, depart
அதிகாரம் - 63 - இடுக்கணழியாமை
மு.வரதராசன் விளக்கம்
விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துன்பங்களைக் கண்டு கலங்காதவனை, விடாமல் தொடரும் துன்பங்கள்,துன்பப்பட்டு அழிந்து விடும்.
பரிமேலழகர் விளக்கம்
அடுக்கி வரினும் - இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும்; அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கண்படும் - தன்னுள்ளக் கோட்பாடு விடாதான் உற்ற இடுக்கண்தாம் இடுக்கணிலே பட்டுப்போம். (ஒன்றே பலகால் வருதலும், வேறுபட்டன விராய் வருதலும் அடங்க 'அடுக்கி வரினும்' என்றார். 'அழிவு' என்னும் காரணப்பெயர் காரியத்தின்மேல் நின்றது. இவை மூன்று பாட்டானும் தெய்வத்தான் ஆயதற்கு அழியாமை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒன்றனுக்குப் பின் ஒன்றாகத் தொடர்ந்து துன்பம் வந்தாலும், மனம் தளராதவனுக்கு வந்த அவ்வகைத் துன்பம் துன்பப்படும்.