மு.வரதராசன் விளக்கம்
துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
இடும்பைக்கு இடும்பை படாஅதவர் - வினை செய்யுங்கால் அதற்கு இடையே வந்த துன்பத்திற்கு வருந்தாதவர்; இடும்பைக்கு இடும்பை படுப்பர் - அத்துன்பந்தனக்குத் தாம் துன்பம் விளைப்பர். (வருந்துதல் - இளைத்துவிட நினைத்தல். மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப்பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் ஆகலின், 'இடும்பைக்கு இடும்பை படுப்பர்' என்றார். வருகின்ற பாட்டு இரண்டினும் இதற்கு இவ்வாறே கொள்க. சொற்பொருட் பின்வருநிலை.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.