குறள் 622:
வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.
Though sorrow, like a flood, comes rolling on, When wise men's mind regards it,- it is gone
அதிகாரம் - 63 - இடுக்கணழியாமை
மு.வரதராசன் விளக்கம்
வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.
பரிமேலழகர் விளக்கம்
வெள்ளத்து அனைய இடும்பை - வெள்ளம்போலக் கரையிலவாய இடும்பைகள் எல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் - அறிவுடையவன் தன் உள்ளத்தான் ஒன்றனை நினைக்க, அத்துணையானே கெடும். (இடும்பையாவது உள்ளத்து ஒரு கோட்பாடேயன்றிப் பிறிதில்லை என்பதூஉம், அது மாறுபடக்கொள்ள நீங்கும் என்பதூஉம் அறிதல் வேண்டுதலின், 'அறிவுடையான்' என்றும், அவ்வுபாயத்தது எண்மை தோன்ற 'உள்ளத்தின் உள்ள' என்றும் கூறினார்.இவை இரண்டு பாட்டானும் ஊழினான் ஆய இடுக்கணால் அழியாமைக்கு உபாயம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.