குறள் 619:

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

Though fate-divine should make your labour vain; Effort its labour's sure reward will gain
அதிகாரம் - 62 - ஆள்வினையுடைமை
மு.வரதராசன் விளக்கம்
ஊழியின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
பரிமேலழகர் விளக்கம்
தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது. (தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)
சாலமன் பாப்பையா விளக்கம்
விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.