பொருட்பால் · குறள் 616 / 1330
62. ஆள்வினையுடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மைஇன்மை புகுத்தி விடும்.

Exertion achieves wealth; absence of it brings on poverty.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

முயற்சி திருவினை ஆக்கும் - அரசர் மாட்டு உளதாய முயற்சி அவரது செல்வத்தினை வளர்க்கும்; முயற்று இன்மை இன்மை புகுத்தி விடும் - அஃதில்லாமை வறுமையை அடைவித்து விடும். (செல்வம் - அறுவகை அங்கங்கள். வறுமை - அவற்றான் வறியராதல். அதனை அடைவிக்கவே, பகைவரான் அழிவர் என்பது கருத்து.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

— சாலமன் பாப்பையா