மு.வரதராசன் விளக்கம்
தன் இன்பத்தை விரும்பாதவனாய் மேற்க்கொண்டச் செயலை முடிக்க விரும்புகிறவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்குகின்ற தூண் ஆவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான்.
பரிமேலழகர் விளக்கம்
இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி வினைமுடித்தலையே விரும்புவான்; தன் கேளிர் துன்பம் துடைத்து ஊன்றும் தூண் - தன் கேளிராகிய பாரத்தின் துன்பத்தினை நீக்கி அதனைத் தாங்கும் தூணாம். (இஃது ஏகதேச உருவகம், 'ஊன்றும்' என்றது அப்பொருட்டாதல், 'மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்கு' (நாலடி.387) என்பதனானும் அறிக. சுற்றத்தார் நட்டாரது வறுமையும் தீர்த்து அவர்க்கு ஏமம் செய்யும் ஆற்றலை உடையவனாம், எனவே தன்னைக் கூறவேண்டாவாயிற்று. காரியத்தை விழையாது காரணத்தை விழைவான் எல்லாப் பயனும் எய்தும் என்றதனால், காரணத்தை விழையாது காரியத்தை விழைவான் யாதும் எய்தான் என்பது பெற்றாம். இதனான் அஃது உடையானது நன்மை கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
இன்பத்தை விரும்பாதவனாய்ச் செயல் செய்வதையே விரும்புபவன், தன் உறவும் நட்புமாகிய பாரத்தின் துன்பத்தைப் போக்கி, அதைத் தாங்கும் தூண் ஆவான்.