குறள் 579:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை.
To smile on those that vex, with kindly face, Enduring long, is most excelling grace
அதிகாரம் - 58 - கண்ணோட்டம்
மு.வரதராசன் விளக்கம்
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து ( அவர் செய்த குற்றத்தைப்) பொருத்துக் காக்கும் பண்பே சிறந்தது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
அழிக்க நினைத்திடும் இயல்புடையவரிடத்திலும் பொறுமை காட்டுவது மிக உயர்ந்த பண்பாகும்.
பரிமேலழகர் விளக்கம்
ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது. ('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்திலும் கண்ணோட்டம் கொண்டு, அவர்தம் பிழையைப் பொறுக்கும் பண்பே சிறந்தது.