மு.வரதராசன் விளக்கம்
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம் உடையவராக இருக்க வல்லவர்க்கு இவ்வுலகம் உரிமை உடையது.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கடமை தவறாமையிலும், கருணை பொழிவதிலும் முதன்மையாக இருப்போருக்கு இந்த உலகமே உரிமையுடையதாகும்.
பரிமேலழகர் விளக்கம்
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு - முறை செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு - உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம். (தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைத்தல்,மேல் 'ஓர்ந்துகண்ணோடாது' (குறள் 541 )என்ற முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக் கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின், 'கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ்வியல்பு உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின், 'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான் கண்ணோடுமாறு கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
தம் செயலுக்குச் சேதம் வராமல் கண்ணோட்டம் கொள்ளும் ஆற்றல் உடையவர்க்கு இந்த உலகம் சொந்தமாகும்.