மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும் பண்பே, அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண்.
பரிமேலழகர் விளக்கம்
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் - ஒருவன் கண்ணிற்கு அணியும்கலமாவது கண்ணோட்டம்; அஃது இன்றேல் புண் என்று உணரப்படும் - அக்கலம் இல்லையாயின் அஃது அறிவு உடையரால் புண் என்று அறியப்படும். (வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும் நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல் நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார். இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்றகண்ணின் குற்றம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் கண்ணிற்கு அணியும் நகை கண்ணோட்டமே; அந்த நகை மட்டும் இல்லை என்றால் அது புண் என்று பெரியோரால் அறியப்படும்.