பொருட்பால் · குறள் 526 / 1330
53. சுற்றந்தழால்

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்மருங்குடையார் மாநிலத்து இல்.

Nothing excels on earth the love of one large of heart and free of wrath, but shares it with the rest.

— V.R. Ramachandra Dikshitar (1949)
விளக்கம்
மு. வரதராசன்

பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

— பேராசிரியர் மு. வரதராசனார்
கலைஞர் மு. கருணாநிதி

பெரிய கொடையுள்ளம் கொண்டவனாகவும், வெகுண்டு எழும் சீற்றத்தை விலக்கியவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப் போல் சுற்றம் சூழ இருப்போர் உலகில் யாரும் இல்லை எனலாம்.

— முத்துவேல் கருணாநிதி
பரிமேலழகர்

பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை. (மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)

— பரிமேலழகர் (செம்மொழி)
சாலமன் பாப்பையா

ஒருவன் பெருங்கொடையை உடையவனாய், சினத்தை விரும்பாதவனாய் இருப்பான் என்றால் அவனைப் போலச் சுற்றம் உடையவர் உலகில் இல்லை.

— சாலமன் பாப்பையா