குறள் 525:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
Who knows the use of pleasant words, and liberal gifts can give, Connections, heaps of them, surrounding him shall live
அதிகாரம் - 53 - சுற்றந்தழால்
மு.வரதராசன் விளக்கம்
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்யவல்லவனானால் ஒருவன் தொடர்ந்த பலச் சுற்றத்தால் சூழப்படுவான்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வள்ளல் தன்மையும், வாஞ்சைமிகு சொல்லும் உடையவனை அடுத்தடுத்துச் சுற்றத்தார் சூழ்ந்து கொண்டேயிருப்பார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும். (இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)
சாலமன் பாப்பையா விளக்கம்
ஒருவன் தன் சுற்றத்தார்க்கு வேண்டியதைக் கொடுத்தும், அவர்களிடம் இனிய சொற்களைச் சொல்லியும் வருவான் என்றால், பல்வகைச் சுற்றத்தாராலும் அவன் சூழப்படுவான்.