மு.வரதராசன் விளக்கம்
தக்க இடத்தை அறிந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவரிடத்திற் சென்று தம் செயலைச் செய்தால், வலிமை இல்லாதவறும் வலிமை உடையவராக வெல்வர்,
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
தாக்குதல் நடத்துவதற்குரிய இடத்தையும் தேர்ந்து, தம்மையும் காத்துக்கொண்டு பகைவருடன் மோதினால் வலிமையில்லாதவர்க்கும் வலிமை ஏற்பட்டு வெற்றிகிட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
ஆற்றாரும் ஆற்றி அடுப - வலியர் அல்லாதாரும் வலியாராய் வெல்வர், இடன் அறிந்து போற்றிப் போற்றார்கண் செயின் - அதற்கு ஏற்ற இடத்தினை அறிந்து, தம்மைக் காத்துப் பகைவர்மாட்டு வினை செய்வாராயின். ('வினை' என்பதூஉம் 'தம்மை' என்பதூஉம் அவாய் நிலையான் வந்தன. காத்தல், பகைவரான் நலிவு வராமல் அரணானும் படையானும் காத்தல். இவற்றான் வினை செய்வாராயின் மேற்சொல்லிய வலியின்றியும் வெல்வர் என்பதாம்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பலம் இல்லாதவர் என்றாலும்கூட ஏற்ற இடத்தை அறிந்து, தம்மையும் காத்து, பகைவரோடு மோதுபவர், பலம் உள்ளவராய்ப் பகையை அழிப்பர்.