குறள் 492:
முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும்.
Though skill in war combine with courage tried on battle-field, The added gain of fort doth great advantage yield
அதிகாரம் - 50 - இடனறிதல்
மு.வரதராசன் விளக்கம்
மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
வரும்பகையை எதிர்க்கும் வலிமை இருப்பினும், அத்துடன் அரணைச் சார்ந்து போரிடும் வாய்ப்பும் இணையுமானால் பெரும்பயன் கிட்டும்.
பரிமேலழகர் விளக்கம்
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் - மாறுபாட்டோடு கூடிய வலியினை உடையார்க்கும், அரண் சேர்ந்து ஆம் ஆக்கம் பலவும் தரும் - அரணைச் சேர்ந்து ஆகின்ற ஆக்கம் பல பயன்களையும் கொடுக்கும். (மாறுபாடாவது: ஞாலம் பொது எனப் பொறா அரசர் மனத்தின் நிகழ்வதாகலானும், வலியுடைமை கூறிய அதனானும்,இது பகைமேற் சென்ற அரசர் மேற்றாயிற்று. உம்மை - சிறப்பு உம்மை. அரண் சேராது ஆம் ஆக்கமும் உண்மையின்,ஈண்டு ஆக்கம் விசேடிக்கப்பட்டது. 'ஆக்கம்' என்றது அதற்கு ஏதுவாய முற்றினை. அது கொடுக்கும் பயன்களாவன: பகைவரால் தமக்கு நலிவின்மையும், தாம் நிலைபெற்று நின்று அவரை நலிதலும் முதலாயின.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பகை உணர்வுகள் நிறைந்தும், ஆற்றலில் மிகுந்தும் இருப்பவர்க்குப் பாதுகாப்பான இடத்துள் இருப்பது பல பயன்களையும் தரும்.