கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
எந்தவொரு பொருள்குறித்து எவர் எதைச் சொன்னாலும், அதை அப்படியே நம்பி ஏற்றுக் கொள்ளாமல் உண்மை எது என்பதை ஆராய்ந்து தெளிவதுதான் அறிவுடைமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் - யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - அப்பொருளின் மெய்யாய பயனைக் காணவல்லது அறிவு. (குணங்கள் மூன்றும் மாறி மாறி வருதல் யாவர்க்கும் உண்மையின், உயர்ந்த பொருள் இழிந்தார் வாயினும், இழிந்த பொருள் உயர்ந்தார் வாயினும், உறுதிப்பொருள் பகைவர்வாயினும், கெடுபொருள் நட்டார்வாயினும், ஒரோவழிக் கேட்கப்படுதலான், 'எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்' என்றார். அடுக்கு, பன்மைபற்றி வந்தது. 'வாய்' என்பது அவர் அப்பொருளின்கண் பயிலாமை உணர்த்திநின்றது. மெய்யாதல் , நிலைபெறுதல். சொல்வாரது இயல்பு நோக்காது, அப்பொருளின் பயன் நோக்கிக் கொள்ளுதல் ஒழிதல் செய்வது அறிவு என்பதாம்.)