மு.வரதராசன் விளக்கம்
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
மனம் போகும் வழியெல்லாம் போக விடாமல் தீய வழிகளைத் தள்ளிவிட்டு, நல்வழியைத் தேர்வு செய்வதே அறிவுடைமையாகும்.
பரிமேலழகர் விளக்கம்
சென்ற இடத்தால் செலவிடாது - மனத்தை அதுசென்ற புலத்தின்கண் செல்ல விடாது, தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு - அப்புலத்தின் நன்மை தீமைகளை ஆராய்ந்து தீயதனின் நீக்கி நல்லதன்கண் செலுத்துவது அறிவு. (வினைக்கு ஏற்ற செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனப் புலம் ஐந்தாயினும் ஒரு காலத்து ஒன்றின்கண் அல்லது செல்லாமையின், 'இடத்தால்' என்றார். 'விடாது' என்பது கடைக்குறைந்து நின்றது. குதிரையை நிலமறிந்து செலுத்தும் வாதுவன் போல வேறாக்கி மனத்தைப் புலமறிந்து செலுத்துவது அறிவு என்றார், அஃது உயிர்க்குணம் ஆகலான்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
மனம் சென்ற வழியெல்லாம் அதைச் செல்ல விடாமல், தீமையை விட்டு விலக்கி, நல்ல வழியில் நடத்துவது அறிவு.