மு.வரதராசன் விளக்கம்
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.
பரிமேலழகர் விளக்கம்
காட்சிக்கு எளியன் - முறை வேண்டினார்க்கும் குறை வேண்டினார்க்கும் காண்டற்கு எளியனாய், கடுஞ்சொல்லன் அல்லனேல் - யாவர் மாட்டும் கடுஞ்சொல்லன் அல்லனும் ஆயின். மன்னன் நிலம் மீக்கூறும் - அம் மன்னனது நிலத்தை எல்லா நிலங்களிலும் உயர்த்துக் கூறும் உலகம் . (முறை வேண்டினார், வலியரான் நலிவு எய்தினார். குறை வேண்டினார், வறுமையுற்று இரந்தார். காண்டற்கு எளிமையாவது, பேர் அத்தாணிக்கண் அந்தணர் சான்றோர் உள்ளிட்டாரோடு செவ்வி உடையனாயிருத்தல். கடுஞ்சொல்: கேள்வியினும் வினையினும் கடியவாய சொல். நிலத்தை மீக்கூறும் எனவே, மன்னனை மீக்கூறுதல் சொல்ல வேண்டாதாயிற்று. மீக்கூறுதல் 'இவன் காக்கின்ற நாடு பசி, பிணி, பகை முதலிய இன்றி யாவர்க்கும் பேரின்பம் தருதலின் தேவருலகினும் நன்று' என்றல். 'உலகம்' என்னும் எழுவாய் வருவிக்கப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
நீதி வேண்டி வருபவர் காண்பதற்கு எளியனாய், எவர் இடத்தும் கடுஞ்சொல் கூறாதவனாய் இருந்தால், ஆளுவோனின் ஆட்சிப் பரப்பு விரிவடையும். (அவர் கட்சி வெற்றி பெறும்தொகுதிகள் கூடும்)