கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அராசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுகாத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
பரிமேலழகர் விளக்கம்
இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன் . (ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று,இளமரக்கா முதலிய செய்தற்கும், ஐம்புலன்களான் நுகர்வனவற்றிற்கும் கொடுத்தலைஇன்பப் பொருட்டாகவும் கொள்க. இயற்றல் முதலியதவறாமல் செய்தல் அரிதாகலின், 'வல்லது' என்றார். இவை நான்கு பாட்டானும் மாட்சியேகூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு.