குறள் 383:
தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனான் பவர்க்கு.
A sleepless promptitude, knowledge, decision strong: These three for aye to rulers of the land belong
அதிகாரம் - 39 - இறைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
காலம் தாழ்த்தாத தன்மை, கல்வியுடைமை, துணிவுடைமை இந்த மூன்று பண்புகளும் நிலத்தை ஆளும் அரசனுக்கு நீங்காமல் இருக்க வேண்டியவை.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
காலம் தாழ்த்தாத விரைவான நடவடிக்கைகளும், அறிவுடைமையும், துணிவும் நாடாளுகின்றவர்களுக்குத் தேவையானவையும், நீங்காமல் நிலைத்திருக்க வேண்டியவையுமான பண்புகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
நிலன் ஆள்பவற்கு - நிலத்தினை ஆளும் திருவுடையாற்கு; தூங்காமை கல்வி துணிவு உடைமை இம்மூன்றும் நீங்கா - அக்காரியங்களில் விரைவுடைமையும், அவை அறிதற்கு ஏற்ற கல்வியுடமையும், ஆண்மை உடைமையும் ஆகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா. (கல்வியது கூறுபாடு முன்னர்க் கூறப்படும். ஆண்மையாவது, ஒன்றனையும் பாராது கடிதில் செய்வது ஆகலின்,அஃது ஈண்டு உபசார வழக்கால் 'துணிவு' எனப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவற்றுள் கல்வி ஆறு அங்கத்திற்கும் உரித்து. ஏனைய வினைக்கு உரிய. 'நீங்கா' என்பதற்குமேல் எஞ்சாமைக்கு உரைத்தாங்கு உரைக்க)
சாலமன் பாப்பையா விளக்கம்
செயல் ஆற்றுவதில் சோர்வு இல்லாமை, அனைத்தையும் அறியும் கல்வி, தீயவை எதிர்த்தாலும் நல்லன செய்வதற்கு ஏற்ற துணிவு இம்மூன்றும் நாட்டை ஆளுவோரை விட்டு விலகக்கூடாது.