குறள் 382:

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு.

Courage, a liberal hand, wisdom, and energy: these four Are qualities a king adorn for evermore
அதிகாரம் - 39 - இறைமாட்சி
மு.வரதராசன் விளக்கம்
அஞ்சாமை, ஈகை , அறிவுடைமை, ஊக்கமுடைமை இந்த நான்கு பண்புகளும் குறைவு படாமல் இருத்தலே அரசனுக்கு இயல்பாகும்.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
துணிவு, இரக்க சிந்தை, அறிவாற்றல், உயர்ந்த குறிக்கோளை எட்டும் முயற்சி ஆகிய நான்கு பண்புகளும் அரசுக்குரிய தகுதிகளாகும்.
பரிமேலழகர் விளக்கம்
வேந்தற்கு இயல்பு - அரசனுக்கு இயல்பாவது, அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந்நான்கும் எஞ்சாமை - திண்மையும் கொடையும், அறிவும், ஊக்கமும், என்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். (ஊக்கம் : வினை செய்தற்கண் மன எழுச்சி. இவற்றுள் அறிவு ஆறு அங்கத்திற்கும் உரித்து; ஈகை படைக்கு உரித்து, ஏனைய வினைக்கு உரிய. உயிர்க்குணங்களுள் ஒன்று தோன்ற ஏனைய அடங்கி வரும். அவற்றுள் இவை அடங்கின், அரசற்குக் கெடுவன பல ஆமாகலின், இவை எப்பொழுதும் தோன்றி நிற்றல் இயல்பாக வேண்டும் என்பார், 'எஞ்சாமை வேந்தற்கு இயல்பு' என்றார்.)
சாலமன் பாப்பையா விளக்கம்
அநீதிக்கும் பகைவர்க்கும் பயப்படாதிருப்பது, வேண்டுவோர்க்கு வேண்டிய கொடுப்பது, வரும் முன்காக்கும் அறிவு, ஆபத்து வந்த பின் தளராத ஊக்கம் - இந்நான்கிலும் குறையாமல் இருப்பது ஆளுவோரின் இயல்பாக இருக்க வேண்டும்.