குறள் 357:
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு.
The mind that knows with certitude what is, and ponders well, Its thoughts on birth again to other life need not to dwell
அதிகாரம் - 36 - மெய்யுணர்தல்
மு.வரதராசன் விளக்கம்
ஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா.
கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்
உண்மையை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்.
பரிமேலழகர் விளக்கம்
உள்ளம் ஒருதலையா ஓர்த்து உள்ளது உணரின் - அங்ஙனம் கேட்ட உபதேச மொழிப் பொருளை, ஒருவன் உள்ளம் அளவைகளானும் பொருந்துமாற்றானும் தெளிய ஆராய்ந்து அதனான் முதற்பொருளை உணருமாயின், பேர்த்துப் பிறப்பு உள்ள வேண்டா - அவனுக்கு மாறிப் பிறப்புளதாக நினைக்க வேண்டா. ('ஒருதலையா ஓர்த்து' என இயையும். அளவைகளும் பொருந்தும் ஆறும் மேலே உரைத்தாம். இதனான் விமரிசம் கூறப்பட்டது.)
சாலமன் பாப்பையா விளக்கம்
பெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் திரும்பவும் ஒரு பிறவி இருக்கும் என்று எண்ண வேண்டா.